தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Posts Tagged ‘தேர்தல் நெறிமுறைகள்

நாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13

leave a comment »

தேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.

முதல் பகுதி – ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)
இரண்டாம் பகுதி – ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)
மூன்றாம் பகுதி – ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
நான்காம் பகுதி – மே 7 (85 தொகுதிகள்)
ஐந்தாம் பகுதி – மே 13 (86 தொகுதிகள்)

முடிவுகள் மே 16இல் இருக்கும்.

சில புள்ளிவிவரங்கள்.

  • இருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது
  • 71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
  • 714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்
  • 8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக்கப்படும்
  • 11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
  • இப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்
Advertisements

தேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்

leave a comment »

நேற்று (செவ்.பிப்ரவரி 17) தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்புகள் பற்றிய புது விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. இதன் படி மாநில/நாடாளுமன்ற தேர்தல் நடக்கப்போகும் தேதிகளிலிருந்து 48 மணிநேரத்திற்கு முன்னால் அனைத்துவிதமான கருத்துக் கணிப்புகளும் [பத்திரிக்கை / வானொலி / தொலைக்காட்சி] தடை செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேளை தேர்தல் பல கட்டங்களாக பிரித்து நடக்கும் பட்சத்தில், கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிக்கும் வரை வெளியிடக் கூடாது.

The guideline said: “No result of any opinion poll or exit poll conducted at any time shall be published, publicised or disseminated in any manner, whatsoever, by print, electronic or any other media, at any time during the period of 48 hours ending with the hour fixed for closing of poll in an election held in a single phase; and in a multi-phased election, and in the case of elections in different States announced simultaneously, at any time during the period starting from 48 hours before the hour fixed for closing of poll in the first phase of the election and till the poll is concluded in all the phases in all States.”

காங்கிரஸ் அலை வீசுகிறதா?

with 2 comments

இன்றைய எகனாமிக் டைம்ஸ் தினசரியில் எம்.கே.வேணு, காங்கிரஸ் முன்னிறுத்தும் யு.பி.ஏ விற்கு சாதகங்கள் அதிகம் என்று எழுதியிருக்கிறார். அவர் எழுதியதன் சாராம்சமும் என் பார்வைகளும் கீழே.

சாராம்சம்

இந்தியாவின் ஒட்டுப் போடும் மக்கள் தொகை சராசரியாக 67 கோடி. இதில் 55% 6 மாநிலங்களில் இருக்கிறது – உத்தரப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பீஹார், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இந்த 6 மாநிலங்களில் 291 தொகுதிகள் (மொத்தம் 545) இருக்கின்றன. பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட இன்றைக்கு முக்கியமாக தேசிய ஆட்சியினை நிறுவும் அதிகாரத்தில் இருக்கின்றன. இம்மாநிலங்களில் நிலவும் மாநில அரசியல், சர்ச்சைகள், மாநில அளவிலான பிரச்சனைகளை சார்ந்து பார்த்தால், காங்கிரஸிற்கே சாதகமான நிலையுள்ளது.

சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸை நம்பி தான் ஆக வேண்டும். இல்லாவிடில் மாயாவதியினை தூக்கியடிக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில் சமாஜ்வாடி கட்சி 35 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது (மொத்தம் 80/81 தொகுதிகள்). இப்போதிருப்பதை அப்படியே தக்கவைத்து கொண்டு காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றும் சாத்தியங்கள் இருக்கின்றன.மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் என்.சி.பிக்கும் இதே மாதிரியான ஒரு நிலைமை உள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைமையின் மீதும் அசையாத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கிறது.

மன்மோகன் சிங்கினை முன்னிறுத்தி, இப்போதிருக்கும் அரசியல்/பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது. ஒரு பொருளாதார வல்லுநரின் தலைமையில் நாடு இருந்தால், இப்போது இருக்கும் உலகளாவிய பொருளாதார சிக்கலிலிருந்து நாட்டினை முன்னேற்ற, சிக்கல்களை களைய முடியும் என்கிற வாதத்தினை காங்கிரஸ் முன்வைக்கிறது. இப்போதே காங்கிரஸ் தன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி உடன்பாடு நடவடிக்கைகளில் இறங்க தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்கிற இரட்டை அஸ்திரங்களில் மூன்றாவது அணி பலவீனமாக இருக்கும். அந்த ஸ்திரத்தன்மை, பாதுக்காப்பினை தான் இரண்டு தேசிய கட்சிகளும் முன்வைக்கின்றன. காங்கிரஸுக்கு இன்னொரு பலமான விஷயம், பா.ஜ.க போல அதற்கு மத சாயம் இல்லாமலிருப்பது. மதச்சார்ப்பின்மை என்பதே காங்கிரஸின் இன்னொரு சீட்டாக முன்வைக்கப்படும்.

கெனிஷிய தியரி தான் இன்றைக்கு உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார விடிவாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஒரு கெனிஷியவாதியாக பார்க்கப்படலாம் கடந்த திட்ட கமிஷன் கலாந்தாய்வில் கலந்து கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிகில்ட்சு சொன்னது “ இன்றைக்கு வலது சாரி என்று யாருமேயில்லை. எல்லோரும் கெனிஷிய தியரியினை எப்படி இடம்பெற செய்யலாம் என்பதில் தான் போட்டி போடுகிறார்கள்”.

ஒரு வேளை, தேர்தல் முடிந்து மீண்டும் கம்யுனிஸ்டுகள் ஒன்றாக சேரலாம் என்கிற பட்சத்தில், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தினை வைத்துக் கொண்டு, காங்கிரஸுக்கு அதுவும் சாதகமாக முடியும்.

என் பார்வை

மேற்சொன்ன வகையில் பார்க்கும் போது கண்டிப்பாக காங்கிரஸிற்கு சாதகமே. ஆனால், மக்களின் மனதில் தொடர்ச்சியாக ஒரு anti-incumbency விஷயம் ஒடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு சிக்கலான மனநிலை.

மாநிலங்களின் பலத்தினை வைத்து கொண்டு தான் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங் வரையிலான கூட்டணி அரசுகள் ஆட்சிபுரிந்திருக்கின்றன. மாநிலங்கள் / பிராந்திய கட்சிகள் இன்றைக்கு தேசிய அளவிலான அரசியல்/சமூகம்/பொரூளாதாரம் ரீதியிலான அச்சுறுத்தல்களையும், சாதகங்களையும் அளிக்கின்றன. முக்கியமாக தெற்கில் பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகளை விட அசுர பலத்தோடு இருக்கின்றன. கர்நாடகாவில் பா.ஜ.கவும், ஆந்திராவில் காங்கிரஸும் ஆண்டாலும், அதற்கு இணையான பலம் பிராந்திய கட்சிகளால் மட்டுமே பெற முடிகிறது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தேசிய கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. கேரளாவில் காங்கிரஸும், கம்யுனிஸ்டுகள் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலை. அப்படி பார்க்கையில், பா.ஜ.கவினை விட காங்கிரஸிற்கு தெற்கில் செல்வாக்கு அதிகம். ஆக இது ஒரு சாதகமான பார்வை. தற்போதைய ராஜஸ்தான்,டெல்லி வெற்றிகளும் காங்கிரஸிற்கு ஊக்கத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் தெற்கில் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி அரசுகள் மீது கடுங்கோவமும், எரிச்சலோடும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை (உ-ம் ஆந்திரா, தற்போதைய தமிழ்நாடு). பா.ஜ.க தெற்கிலிருக்கும் செல்வாக்கு மிகக் குறைவு. பா.ஜ.கவினை விட கம்யுனிஸ்டுகளுக்கு தெற்கில் செல்வாக்கு அதிகம்.

ஆகவே சாதகங்கள் அதிகமிருந்தாலும் its too early to predict the voters’ mind.

Disclaimer: தமிழீழ பிரச்சனையில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு தி.மு.க அரசு மீதும், மத்தியில் ஆளும் காங்கிரஸின் யு.பி.ஏ மீதும் கடுங்கோவமும், அவர்கள் தூக்கி எறியப்படவேண்டும் என்கிற ஆதங்கமும் இருக்கிறது. ஒரு விமர்சகனாக என்னுடைய பார்வை என்றைக்கும் உண்மை நிலவரத்தினை ஒத்ததாகவே இருக்கும்.

கருத்துக் கணிப்பு அவசியமா? – விவாதம்

with one comment

வழக்கமாக எழுதும் நண்பர்களை தவிர தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பிற பதிவர்களின் குரலையும் இப்பதிவில் பதிவு செய்யலாம் என்கிற யோசனை தோன்றியது. அதற்கு தோதாக நேற்று காலை “முதல் குரல்” (ஜீ தமிழ்) தொலைக்காட்சியில் சுதாங்கன், ஜென்ராம், ஞாநி, பத்ரி கலந்துரையாடியது நிகழ்ந்தது. அதை பத்ரி தன்னுடைய பதிவில் வெளியிட்டு இருக்கிறார். கருத்துக் கணிப்பு சார்ந்த விவாதமாய் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

“முதல் குரல்”

Zee தமிழ் சானலில், காலை 8.30 (மறு ஒளிபரப்பு இரவு 10.00) மணிக்கு “முதல் குரல்” என்ற நிகழ்ச்சி வருகிறது. சுதாங்கன், ஜென்ராம் ஆகியோருடன் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு நடத்தப்படும் விவாதம்.

தேர்தலுக்கு முன் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிந்து வெளியே வருவோரிடம் நடத்தப்படும் கணிப்பு ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் தடை செய்யுமா, செய்யலாமா என்பது பற்றிய விவாதம் நேற்று ஒளிபரப்பானது. பத்திரிகையாளர் ஞாநியும் நானும் கலந்துகொண்டிருந்தோம். சென்ற வாரம் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்றுதான் ஒளிபரப்பானது.

கருத்துக் கணிப்பு மக்களின் மன ஓட்டத்தை மாற்றி, அவர்கள் வாக்களிக்க நினைத்திருக்கும் தேர்வில் மாற்றத்தை உண்டாக்குமா? ஜெயிப்பவருக்கே தனது வாக்கு போகவேண்டும் என்றா மக்கள் நினைக்கிறார்கள்?

என் கருத்து: கருத்துக் கணிப்பு என்பது நிச்சயமாக மக்கள் மனத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்தக் காரணத்தாலேயே கருத்துக் கணிப்பைத் தடை செய்யமுடியாது. தேர்தல் பிரசாரமும்தான் மக்கள் மனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. கருத்துக் கணிப்பை மட்டுமே நம்பி அதில் சொல்லப்படும் திசையில் அப்பாவி மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள் என்பதை நான் ஏற்கவில்லை.

இடைத்தேர்தலில் பணம் வாரி இறைக்கப்படும் நேரங்களைத் தவிர்த்து, மக்களுக்கு நேரடியாக லஞ்சம் கொடுக்கப்படும் நேரங்களைத் தவிர்த்து, மக்கள்மீது வன்முறை செலுத்தப்படும் என்ற பயம் இருக்கும் நேரங்களைத் தவிர்த்து, பொதுவாக மக்கள் சில முன்தீர்மானங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை போன்ற மாபெரும் நிகழ்வுகள் தவிர்த்து, வேறு எதுவும் மக்கள் தீர்மானங்களை எளிதாக மாற்றிவிடுவதில்லை.

ஞாநி, ராஜீவ் கொலையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். திமுகதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதாக ஒரு பொய்ப் பிரசாரம் நடந்து, அதன் காரணமாக திமுக தோற்கடிக்கப்பட்டது. இதே கட்டத்தில், ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தி, 80% மக்கள் திமுகதான் இந்தக் கொலையைச் செய்தது என்று நம்புகிறார்கள் என்று சொன்னால் மக்கள் மேலும் அதிகமாக இதனை நம்பும் வாய்ப்புகள் இருந்திருக்கும் என்றார்.

கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்களோ, சில தனிப்பட்ட அமைப்பினரோ தங்களுக்குச் சாதகமாகத் திரிப்பதில் விருப்பம் கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால், நம் மக்கள் முட்டாள்கள், படிப்பறிவில்லாதவர்கள், இந்தக் கணிப்புகளை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதை நம்பி, தங்களது வாக்குகளை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. அதேபோல, யார் ஜெயிக்கப்போகிறார்களோ அவர்களுக்குத்தான் தனது வாக்கு போலவேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்கள் என்றும் நான் நினைக்கவில்லை.

அதே நேரம், இந்தியக் குடியாட்சி முறை மேலும் முதிர்ச்சி அடையவேண்டும். அப்படிப்பட்ட நிலையில் கருத்துக் கணிப்புகளைக் கண்டு – திரிக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும் சரி, நியாயமான கருத்தாக இருந்தாலும் சரி – எந்தப் பிரிவினரும் அஞ்சவேண்டிய தேவையே இல்லை. கருத்துக் கணிப்பை யார் வழங்குகிறார்கள், கருத்துக் கணிப்பு மெதடாலஜி என்ன (எத்தனை பேரிடம் கருத்துகளைக் கேட்டனர்; எந்த மாதிரியான கேள்விகள், சாம்பிள் ஸ்பேஸை எப்படி வரையறுத்தனர், எந்த மாதிரியான அனாலிசிஸ் செய்யப்பட்டது…), கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் பின்னணி எப்படிப்பட்டது, அவர்கள் நம்பத்தகுந்தவர்களா ஆகியவற்றை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

இணையம் வழிப் பிரசாரம், எஸ்.எம்.எஸ் பிரசாரம் ஆகியவை பற்றியும் ஓரிரு கருத்துகள் சொல்லப்பட்டன.

கருத்துக் கணிப்புகள் கூடாது என்பதல்ல தன் கருத்து, ஆனால், ஒரு level playing field இருப்பதற்காக தேர்தல் ஆணையம் சில regulatory mechanisms வைத்திருக்கவேண்டும் என்றார் ஞாநி.

தேர்தலை ஒழுங்காக நடத்தி முடிவுகளை அறிவிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருக்கவேண்டும்; மாறாக கருத்துக் கணிப்பு இருக்கலாமா, கூடாதா, தேர்தல் பிரசாரம் எத்தனை மணி நேரம் இருக்கவேண்டும், எப்படியெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்யலாம், கூடாது, போஸ்டர் ஒட்டலாமா, கூடாதா, இணையத்தளம் நடத்தலாமா, கூடாதா ஆகியவையெல்லாம் தேர்தல் கமிஷனின் வேலையாக இருக்கக்கூடாது என்பது என் கருத்து.

***

சுவாரசியமான நிகழ்ச்சிதான். ஆனால் அரை மணி நேரத்தில் (23 நிமிடம்?) நான்கு பேர் பேசுவதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கடினம். பல விஷயங்கள் சொல்லப்படாமலேயே அல்லது எதிர்க்கப்படாமலேயே நிகழ்ச்சி உடனடியாக முடிந்துவிடுவதுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது. நான்கு பேர் பேசுவதற்கு இந்தக் குறைவான நேரம் போதுமா என்று தெரியவில்லை.

இதுவே அதிகம் என்று பார்வையாளர்கள் ஒருவேளை நினைக்கலாம்:-)

***

நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிந்து வாசலில் சில நிமிடங்கள் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். ஊடகங்கள் – முக்கியமாக தொலைக்காட்சி சானல்கள் – எந்த அளவுக்கு அரசியல் சார்புள்ளவையாக, கட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன என்று பேச்சு எழுந்தது. அப்போது, இணையம் எந்த வகையில் மாற்று ஊடகமாக சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றி விவாதித்தோம். இணையம் அதிகமாகப் பரவவில்லை என்றாலும் விரைவில், செல்பேசிகள் (3G) பரவி, அதன்மூலம் மக்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும் என்று பேசினேன்.

இதில் சிலவற்றை எழுத முயற்சி செய்கிறேன்.

நன்றி: பத்ரி சேஷாத்திரி | பத்ரியின் பதிவு

விவாதம்: பெருசு Vs. இளசு

with one comment

Senior Vs. Junior
நன்றி: பிஸினஸ்லைன்

மணிரத்னத்தின் “ஆயுத எழுத்து”, லிங்குசாமியின் “ஜி”, ஷங்கரின் “முதல்வன்” என படங்களை வரிசைப்படுத்தினால் எல்லோரும் முன்வைக்கும் ஒரு வாதம் அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது. டாடா டீயின் ”ஜாகோ ரே” தளத்திற்கான விளம்பரத்திலும் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி வேண்டும் என்பதும், ஐடியா செல்லுலாரின் விளம்பரங்கள் (அபிஷேக் பச்சன்) அரசியல் ரீதியான தீர்வுகளை எப்படி மக்களிடம் கேட்டு எடுக்க வேண்டும் என்பதை முன்வைத்தும் சொல்லப்பட்டிருக்கும்.

ஜனநாயக நாடுகளில், மிக இளமையான மக்கள் தொகை (18-45) கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் எல்லோருமே 60 வயதினை தாண்டியவர்களாக (ராஜீவ் காந்தி நீங்கலாக) இருக்கிறார்கள். ஒரு இளமையான தேசத்திற்கு முதுமையான தலைவர்கள் என்னவிதமான செய்திகளையும், நம்பிகைகளையும் விதைக்க முடியும்? இன்றைக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை இளைஞர்களுமே அவரவர் தந்தை, சொந்த கட்சி சார்பாக இருப்பவர்களேயொழிய, நிஜமான நடுத்தர வர்க மக்களின், இளைஞர்களின் இன்றைய தேவைகளை புரிந்து கொள்ளூம் ஒரு பிரதிநிதி இன்று வரை வரவில்லை.

Innovative Radical Reforms Organisation என்ற அரசியல்-சாரா அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் பிரபாத் குமார் இன்றைய பிஸினஸ்லைனில் மிக முக்கியமான இந்த விஷயத்தினை தொட்டிருக்கிறார். இளைஞர்கள் எப்படி அரசியலை பார்க்கிறார்கள் (”அது சாக்கடை”, “நாம இருந்தமா, நம்ம வேலைய பார்த்தமா சம்பாதிச்சமா” “இறங்கிடணும், அப்பதான் ஒரு 35-40ல வாரிய செயலாளர் போஸ்டிங் வாங்கிடலாம்”) Vs. பெரியவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது ஒரு மிக முக்கியமாக விவாதிக்க பட வேண்டிய விஷயம்.

கீழே வரும்   கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

  1. ஏன் ஒரு சராசரி இந்திய இளைஞனுக்கு அரசியல் பார்வையில்லை ?
  2. இந்திய அரசியலில் பெண்களை எப்படி பார்க்கிறது? பெண்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள் ?
  3. அரசியல் ரீதியான முடிவுகளை, இன்றைய இளைஞர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அரசியலே புரியவில்லையா?