தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Posts Tagged ‘தமிழ்ப்பதிவுகள்

Anti-incumbency Factor தேய்கிறதா?

leave a comment »

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் – anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு “qualified extension” அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

Advertisements

முதல் பார்வை

with 4 comments

வணக்கம். இது ஒரு கூட்டு வலைப்பதிவு.இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல்கள் 2009 வருடம் மே மாதம் நடைபெறலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. இன்னமும் முழுமையான விவரஙக்ள் வரவில்லை. இந்தியா இந்த தேர்தலை ஒரு சிக்கலான தருணத்தில் சந்திக்கிறது.

ஒபாமா போன்ற நம்பிக்கையூட்டும் தலைவர்கள் இந்தியாவில் இல்லை. காங்கிரஸ் 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மாநில தேர்தல்களின் வெற்றியில் கொஞ்சம் நம்பிக்கையோடு இருக்கிறது. பிஜேபி இரண்டு மாநிலங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சோனியா தலைமையில் இந்த தேர்தலை சந்திக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று பெரியதாக சொல்லி கொள்ளும்படி காங்கிரஸில் இல்லை. அப்படியே பேசினாலும், அது நேரு குடும்ப வாரிசாக தான் இருக்கமுடியும். பிஜேபி அத்வானியினை பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்துகிறது. பிஜேபியில் மீடியாவுக்கு தெரிந்தார் போல இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்கிறார்கள். இதுதாண்டி ஆந்திராவில் தெலுகு தேசம், தமிழகத்தில் திராவிட கட்சிகள், முலாயம் சிங்/அமர் சிங் கோஷ்டிகள், லல்லு பிரசாத் யாதவ், பல கிளைகளாக பிரிந்திருக்கும் கம்யுனிஸ்டுகள், மாயாவதி என நீளும் பட்டியலில் நடக்கப்படும் கூட்டணி பேரங்கள், கொள்கை முழக்கங்கள் என தேர்தல் திருவிழா களை கட்டும்.

“பாரத் நிர்மாண்” என்கிற பெயரில் காங்கிரஸ் தலைமேயேற்றிருக்கும் UPA 200 கோடி ரூபாய் செலவில் சுயபெருமைகளை தம்பட்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. “இந்தியா ஒளிர்கிறது” என்று செய்த அதே தவறினை வேறு மாதிரியாக செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பதிவில் இனி வரும் நாட்களில், கட்சிகளின் அரசியல் பல/பலவீனங்கள், மாநிலம் சார்ந்த அரசியல், தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகளின் பல/பலவீனங்கள் என தேர்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் அலசி ஆராயப்படும்.