தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Posts Tagged ‘அலசல்

Gross Domestic Politics

with 2 comments

சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.

இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?

Advertisements

அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?

leave a comment »

தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

டெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.

இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.

  • பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு
  • தீவிரவாத அச்சுறுத்தல்
  • பணப்புழக்கம்
  • மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்
  • உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி
  • விவசாயிகளின் பிரச்சனைகள்

இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.

மூன்றாவது அணி???

with 5 comments

ஒவ்வொரு தேர்தலிலும் “மூன்றாவது அணி” என்கிற வாசகம் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்து, பின் தேர்தலுக்கு மிக அருகாமையில் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு”-ஆன கதையாய் விளங்காமல் போகும். இதன் பின் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் அமெரிக்கா போல இரட்டை ஆட்சி முறை இல்லாமல் போனாலும், பொதுவான தேசிய கட்சிகள் என்று காங்கிரஸும், பாரதிய ஜனதா தளமும், கம்யுனிஸ்டுகளையும் சொல்லலாம். பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) ஆங்காங்கே தலை காட்டினாலும், நடந்து முடிந்த டெல்லி மாநில தேர்தலில் உதை வாங்கியது மறந்திருக்காது. இதை தாண்டி, அதிமுக மறக்காமல் ஒவ்வொரு முறையும் கர்நாடாகாவில் நிற்கும், தோற்று போகும். திமுக பாண்டிச்சேரியில் நின்று ஜெயித்திருந்தாலும், பாண்டிச்சேரி தமிழ்நாட்டின் ஒரு விரிவாகவே இந்நாள் வரை பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த தேர்தலில் மூன்றாம் அணிக்கான சாத்தியங்கள் எவையெவை?

பிஜேபி, காங்கிரஸ் இருவரின் அணிகளை தாண்டிய ஒன்று தான் மூன்றாவது அணியாக இருக்க முடியும். கம்யுனிஸ்டுகள் அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தில் யுபிஏவிலிருந்து வெளியேறினார்கள். இன்றைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாத முன்பே, தமிழகத்தில் அதிமுக-வோடும், ஆந்திராவில்-தெலுகு தேசத்தோடும் கூட்டணியினை முடிவு செய்து விட்டார்கள் (மொத்தம் 81 தொகுதிகள் – தமிழகம் 40 (பாண்டிச்சேரியும் சேர்த்து)+ஆந்திரா 41). தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் மீது அதிகமான அபிமானமோ, எதிர்ப்போ இல்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனையினை திமுக அரசு எதிர்கொண்ட விதம் கடுப்பேற்றினாலும், அது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. ஆனாலும்,கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் செய்யப்பட்ட மின்வெட்டுகள், இயற்கை இடர்களை சரியாக எதிர் கொள்ளாதது, பதவிநீக்கம் செய்யப்பட்ட மந்திரிகள் என திமுக ஒரு தொய்வினை சந்தித்திருக்கிறது என்பது உண்மை. அதே சமயம், அதிமுகவிற்கு மிக தீவிரமாக பேச எதுவுமில்லை என்பதும் உண்மை.

தமிழகத்தினை விட ஆந்திராவில் கூட்டணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ராஜசேகர் ரெட்டி (காங்) அரசின் மீது கடுங்கோவமும், எரிச்சலும் மக்கள் கொண்டுள்ளார்கள். போதாதாகுறைக்கு சத்யம் ஊழல் வேறு. தெலுகு தேசம் இதுதான் சந்தர்ப்பமென்று பார்த்து “தெலுங்கானா”-விற்கு ஆதரவு இருக்கிறது என இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். குட்டி தெலுங்கானா கட்சிகளுக்கு இருந்த ஒரே பேர-வர்த்தகமும் இதனால் அடிப்பட்டு போனது. ஆக தெலுகு தேசம்/கம்யு. கூட்டணிக்கு ஒட்டுகள் சேரலாம்.

கேரளாவில் இப்போது போட்டுக் கொண்டிருக்கும் குடுமி பிடி சண்டைகள், நந்திகிராம், சிங்கூர் என நாடறிந்து நாறிய மே.வங்காளம் என கம்யுனிஸ்டுகளுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், போன முறை பிடித்த 61 தொகுதிகளை விட, கூட்டணி பலத்தோடு இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதிகமான தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேஷில் (80 தொகுதிகள்) – காங்கிரஸோ, பிஜேபியோ பலமாக இல்லை. மாயாவதிக்கு சோனியாவை கண்டால் ஆகாது, அதனால் காங்கிரஸோடு ஜென்மத்திற்கும் கூட்டணி வைக்க முடியாது. பிஜேபியோடு கருத்தியல் ரீதியான பிரச்சனைகள் அதிகம். ஆக மாயாவதி தேசிய அரசியலில் நுழைய அவருக்கிருக்கும் ஒரே வழி கம்யுனிஸ்டுகள். ஒரு வாதத்துக்கு மாயாவதி-ஜெயலலிதா-சந்திரபாபு நாயுடு-கம்யுனிஸ்டுகள் ஒன்று சேர்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அங்கேயும் குடுமி பிடி சண்டைகள் அதிகம். கர்நாகாவினை பொறுத்தவரை குமாரசாமி என்ன முடிவெடுப்பார் என்று இன்னமும் தெளிவாக தெரியவில்லை. கண்டிப்பாக ஆளும் பிஜேபியோடு கூட்டணி வைக்க மாட்டார். காங்கிரஸுக்கும் குமாரசாமிக்குமான உறவு ஒரு மாதிரியான extra marital affair. எப்போது சேருவார்கள், எப்போது விலகுவார்கள் என்று தெரியாது. ஒருவேளை குமாரசாமி கம்யுனிஸ்டுகளோடு இணைந்தால், தெற்கு மற்றும் உத்தரபிரதேசம் சார்ந்த பேப்பரில் பலமான ஒரு தீவிரமான மூன்றாவது அணிக்கு ஒரு வாய்ப்பிருகிறது.

இன்னமும் முழுமையான தேர்தல் தேதிகள் வராத நிலையில், மேற்சொன்ன கூட்டணியிலேயே பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்போது மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் ஒரளவு பிரகாசமாக இருக்க காரணம், காங்கிரஸ் மற்றும் பிஜேபி – இரு கட்சிகளிலும் தலைமையும், கூட்டணிகளும் பெரியதாக இல்லை என்பதுதானேயொழிய, இது ஒரு சிறப்பான மூன்றாவது அணி என்பது இல்லை.