தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Elections – My wish list

with one comment

தேர்தல்களும் IPL-உம் ஒரே சமயத்தில் நடப்பது பொருத்தமானதுதான் – இரண்டுமே பார்வையாளர்களுக்கான கேளிக்கை வைபவங்கள். விளையாட்டு நிகழ்வைப் பார்க்கும் போது முடிவின் மீது அக்கறை இல்லாமல் பார்ப்பது சுவாரசியமில்லாதது. You need to have a rooting interest to keep things interesting. அதேபோல் தான் தேர்தலும். ஆனால், இந்தத் தேர்தலின் மொத்த முடிவில் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பிரமாதமான rooting interest இல்லை. பிஜேபி-யா, ஓகே, காங்கிரஸா, ஓகே, மூன்றாவது அணியா, ம்ம்ம்…அது கூட ஓரளவுக்கு ஓகே என்று தான் இருக்கிறேன். 

ஆதலால், தனிப்பட்ட தேர்தல் முடிவுகள் பலவற்றை சுவாரசியத்துடன் தொடர்வது என முடிவு செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட சில தேர்தல் போட்டிகளும், அவற்றில் எனது ஆதரவு/எதிர்ப்பு ஆர்வங்களும்:

1. வருண் காந்தி தோற்க வேண்டும்: இவர் வெற்றி பெற்றால், அது அவரது வெறுப்புப் பேச்சுக்கு மட்டுமே கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படும் கொடுமை நிகழும். 

2. ஜஸ்வந்த் சிங் தோற்க வேண்டும்: இவருக்கு புத்தி இல்லை. ஆனால், பாஜக ஆட்சி அமைத்தால், இவருக்கு முக்கியப் பதவி கிடைக்கும். அது தடுக்கப்பட இவர் தோற்க வேண்டும்.

3. சசி தரூர் ஜெயிக்க வேண்டும்: புத்திசாலி, நன்றாகப் பேசுவர், நிர்வாகத் திறன் உண்டு. பாராளுமன்றம் கொஞ்சம் களை கட்டும்.

4. தயாநிதி மாறன் தோற்க வேண்டும்: ஊழல், அடாவடித்தனம், nepotism – இவை எல்லா இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இவற்றின்  ஒட்டு மொத்தச் சின்னங்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக.

5. அழகிரி தோற்க வேண்டும்: மேலே காண்க 

6. காடுவெட்டி குரு தோற்க வேண்டும்.

7. திருமாவளவன் ஜெயிக்க வேண்டும்: கூட்டணிக் குழப்பங்களிலும் கொள்கை மாறாமல் இருப்பது மதிக்கப்பட வேண்டும். இவரது கொள்கைகளில் பல எனக்கு ஏற்புடையது இல்லாவிடினும், இவரது குரல் டெல்லியில் ஒலிப்பது இவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

8. வைகோ ஜெயிக்க வேண்டும்: மேலே காண்க.

9. JK ரித்தீஷ் தோற்க வேண்டும்: Well, duh!

10. சரத்பாபு (தெ.செ) ஜெயிக்க வேண்டும்: இளமை, கடின உழைப்பு, கல்வி, தன்முனைப்பு ஆகியவற்றிற்கு இந்திய ஜனநாயகத்தில் இடம் உண்டு என்ற நம்பிக்கை கொடுப்பதற்காக.

இப்போதைக்கு இவ்வளவு தான்…:-)

Written by srikan2

April 17, 2009 at 1:21 PM

தேர்தல் உறவுகள்: SP & NC – PMK & DMDK

leave a comment »

ஒரு வழியாக சமாஜ்வாடி கட்சி – காங்கிரஸ் தேர்தல் உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்துவில் வந்திருக்கும் செய்தி சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டது. இதை ஏற்கனவே என்னுடைய பதிவில் யூகித்திருந்தேன். இப்போது சமாஜ்வாடி கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸோடு நெருக்கமாக உறவாடி வருகிறது. சரத் பவாரோ சிவசேனாவோடு பேசியிருக்கிறார். மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை. ஒரு வேளை அது சரிவராத பட்சத்தில், சமாஜ்வாடி கட்சி – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா – பாஜக கூட்டணி உருவாக வாய்ப்புண்டு. அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயா அல்லது வெளியிலிருந்து ஆதரவா என்பது இன்னமும் சில நாட்களில் தெரியும்.

இன்னமும்,தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வலிமை உடைய கட்சிகளாக கருதப்படும் இரண்டு கட்சிகள் (பாமக மற்றும் தேமுதிக) கூட்டணியினை அறிவிக்கவில்லை. செய்திகளின்படி பார்த்தால், பாமக பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடே இருக்குமென்று தோன்றுகிறது. அன்புமணி ராமதாஸ் ஐ.மு.கூ நன்றாக ஆண்டது என்று சொன்னதும்,ராமதாஸ் ஜெ.யின் உண்ணாவிரதத்தினை பற்றி பெரியதாக எதுவும் சொல்லததும் காரணங்களாக இருக்கலாம்.

ஒரு நிகழ்ச்சியில், தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும், காங்கிரஸின் மாநிலத்தலைவர் தங்கபாலுவும் சந்தித்து தனியறையில் பேசியது, காங்கிரஸ் தேமுதிகவினை ஐ.மு.கூ விற்கு இழுக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

அடுத்த வாரம் ஒரு முக்கியமான வாரம். பல முக்கிய கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். மார்ச் இரண்டாம் வார இறுதியிலிருந்து எல்லா கட்சியும் புயல்வேக பிரச்சாரத்திற்கு புறப்படுவார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு

with 2 comments

டைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் பற்றிய அவர்களின் கணிப்பினை இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறது. தொகுப்பு கீழே. நான் தொடர்ச்சியாக சொல்லி கொண்டு வருகிற அதே விஷயம் தான் இதிலும் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணக்களவில் வலுவாக இருக்கிறது. இந்த கணிப்பும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் ஐ.மு.கூ இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நிதர்சனத்தில் இன்னமும் அவர்கள் இருவரும் தொகுதி உடன்பாடு எண்ணிக்கையினை எட்டவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை காங். 5 மற்றும் கூட்டணி (முக்கியமாக திமுக) 11 இடங்கள் பெறும் என்று போட்டிருக்கிறது. இக்கணிப்பில் பாமக, அதிமுகவினை நோக்கி நகரும் என கணக்கிட்டு போட்டிருக்கிறார்கள். காங். 5 என்பது பெறக்கூடியதே. ஆனால் பாமக இல்லாத திமுக 11 இடங்கள் என்பது கொஞ்சம் சர்ச்சைக்குரியதே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஆறிலும் வென்றார்கள். ஒரு வேளை அதிமுக வுக்கு இடம்பெயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக உயரலாம், ஏனெனில் அதிமுக, பாமக தவிர்த்து மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளோடும் தொகுதி பங்கு பேரத்தை மேற்கொள்ள வேண்டும்.

Times of India Poll Prediction

Times of India Poll Prediction

கட்சிகள். கூட்டணிகள். கணக்குகள்

with 2 comments

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கும்.இறுதியாக இப்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பா.ஜ.க முன்னிறுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. தேவ கெளடாவின் மூன்றாவது அணீ மார்ச் 12 அன்றைக்கு அனைத்து தலைவர்களோடும் தன் தேர்தல் பிரச்சாரத்தினை தொடக்க இருக்கிறது. ஆனால், இந்த மூன்றாவது அணி ஒட்டினை பிரித்து, யார் பதவிக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களோடு போய்விடும் என்பது தான் பரவலான எண்ணம்.

இப்போதைக்கு யார் யாரோடு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

ஐக்கிய முற்போக்கு அணி (UPA)

  • காங்கிரஸ் – சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் மற்றும் மாநில ரீதியான காங்கிரஸ் தலைவர்கள்
  • ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD + LJP) – லாலு பிரசாத் யாதவ் (பீகார்)
  • ஜனதா முக்தி மோர்ச்சா (JMM)- சிபு சோரன், (ஜார்கண்ட்) (சமீபத்திய செய்திகளில், முதலமைச்சர் பதவி தராததால் சிபு சோரன் கோவமடைந்து இருப்பதாக கேள்வி)
  • திரிணாமுல் காங்கிரஸ் (TP) – மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்)
  • தேசிய காங்கிரஸ் – உமர்/பரூக் அப்துல்லா (ஜம்மு & காஷ்மீர்)
  • சமாஜ்வாடி கட்சி (SP) – முலாயம் சிங்/அமர் சிங் கூட்டணி (உத்தரப்பிரதேசம்). முலாயம் நடுவில் “சரத் பவார்” பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். இது தாண்டி, உ.பியின் தொகுதி பங்கீட்டில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.
  • தேசியவாத காங்கிரஸ் (NCP) – சரத் பவார். மஹாராஷ்ட்ராவின் கிங் மேக்கர். காங்கிரஸோடு தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னமும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. கூடவே, சிவசேனாவோடு வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். மஹாராஷ்டிராவில் இப்போது காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸின் கூட்டணி அரசு நடந்து கொண்டிருக்கிறது.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) – கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா (தமிழ்நாடு) தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலை இருப்பதாக தெரிகிறது.காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக கருணாநிதி கூட்டணியை தக்கவைத்து கொண்டு இருக்கிறார். தேர்தலின் முடிவுக்கு பின், காங்கிரஸ் கூட்டணி பற்றி பரிசீலனை செய்யலாம்.
  • விடுதலைச் சிறுத்தைகள் (VCK) – திருமாவளவன் (தமிழ்நாடு).கருணாநிதியோடு கூட்டணியில் இருக்கிறார். தலித் மக்களின் ஒட்டு இன்னமும் விடுதலைச் சிறுத்தைகள் பக்கம் இருக்கிறது. ஆனால், இலங்கைப்பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் கவனமும், கருணாநிதியோடு கூட்டும் எதிர்மறையானது.

ஆக இப்போதைக்கு
UPA = INC + RJD + LJP + TP + SP + NCP + NC + DMK + VCK + உதிரிக் கட்சிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)

  • பாரதீய ஜனதா கட்சி – அத்வானி, மோடி, அருண் ஜெட்லீ, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்.
  • அகாலி தளம் (AD) – பஞ்சாப்.கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • இந்திய தேசிய லோக் தளம் (INLD) – சவுதாலா. ஹரியானாவின் மிக முக்கியமான தலைவர். கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) – அஜித் சிங். உத்தரப்பிரதேசம். ஜாட் இன மக்களின் முக்கியமான தலைவர். கூட்டணியும், தொகுதி பங்கீடும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு உ.பியின் ஜாட் இன மக்கள் அதிகம். மாயாவதிக்கும், சமாஜ்வாடி பார்ட்டிக்கும் கடுமையான போட்டியாக இருக்கும்.
  • பாரதீய ஜனதா தள் (BJD) – பிஜு பட்நாயக்.ஒரிஸ்ஸா.கூட்டணி உறுதி. தொகுதி பங்கீடு இன்னமும் முடியவில்லை.
  • சிவ சேனா – பால் தாக்கரே. மஹாராஷ்டிரா. பெரியதாக இப்போதைக்கு மஹாராஷ்டிராவில் சிவ சேனாவிற்கு மரியாதை இல்லை. பா.ஜ.கவோடு பல சமயங்களில் கருத்து ரீதியான மோதல்கள் இருந்திருக்கிறது. ஆனாலும், இந்த தேர்தலை சேர்ந்தே சந்தித்தாக வேண்டிய கட்டாயம். ஒரு வேளை சரத் பவார் மனசு மாறினாறென்றால், சிவசேனா + பாஜக + தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸினை இடம் தெரியாமல் ஒட வைக்கலாம்.
  • அஸ்ஸாம் கன பரிஷத் (AGP) – பிரபல் குமார் மகந்தா. அஸ்ஸாம். பாஜக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸிற்கு எதிரானது என்பதால், உடன்படிக்கை ஏற்படலாம் என்பது நம்பிக்கை.
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) – விஜயகாந்த். தமிழ்நாடு. இதை எழுதும் இந்த நிமிடம் வரை எவ்விதமான கூட்டணியும் இல்லை. ஆனால் செய்திகள் தேமுதிகவும் பாஜகவும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கின்றன. சென்ற மாநில தேர்தல்களில் 8.33% ஒட்டு பெற்று மக்களி்ன் கவனத்தினை ஈர்த்த கட்சி. இளைஞர்கள் மத்தியில் விஜயகாந்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் நிச்சயமில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று வேறு நடுவில் சொல்லியிருந்தார்கள்

ஆக இப்போதைக்கு
NDA = BJP + Shiv Sena + AD + INLD + AGP + RLD + உதிரிக் கட்சிகள்

மூன்றாவது அணி

மார்ச் 12 ஆம் தேதி தேவ கெளடா தலைமையில் துவக்கம் இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் இன்பார்மலாக பல கட்சிகள் அதில் இருக்கின்றன.

ஜனதா தளம் (இணைப்பு) (JD (U)) – முந்திய பிரதமர் தேவ கெளடா. முன்னாளைய கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி. கர்நாடாகாவில் மிக முக்கியமானn கட்சி. கன்னடிகா, கன்னட எழுச்சி என்று பெங்களூர் சாராத கர்நாடாகாவில் வலிமையோடு இருக்கக்கூடிய கட்சி.
பிரச்சனை: ஒரு வேளை தேர்தலில் ஜெயித்து, ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வருமெனில் அங்கே தாவி விடக் கூடிய அபாயமிருக்கிறது. அவர்களுடைய பிரச்சனை மாநிலத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, பிறகு கவிழ்த்து, இப்போதைக்கு பாஜக ஆட்சி நடந்து வருவது.

கம்யுனிஸ்டுகள் (CPI /CPM) -பிரகாஷ் காரத். பிருந்தா காரத்.புத்ததேவ் பட்டாச்சார்யா. பரதன். பின்ராயி விஜயன். மேற்கு வங்காளம், கேரளாவில் ஆட்சி்யிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் வெளியேறினார்கள். பிரகாஷ் காரத்திற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு கூட்டணியில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்தியா முழுக்க கம்யுனிஸ்டு அனுதாபிகள் இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜகவை விட இந்தியாவெங்கும் ஒரளவிற்கு பரவலான வாக்காளர்களை கொண்ட கட்சி.
பிரச்சனை: தனித்து இருப்பதால், வாக்கினை பிரிக்கலாமெயொழிய ஆட்சி அமைக்க முடியாது. நல்ல எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) – ஜெயலலிதா. தமிழ்நாடு. திமுக எதிர்ப்பலையில் இப்போதைக்கு உற்சாகமாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியில் இருக்கிறேன் என்று போயஸ் கார்டனில் தலைவர்களோடு தேனீர் அருந்திவிட்டு, காங்கிரஸை தன்னோடு சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தவர். தென் தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி அதிகம். மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகள் களத்தில் இறங்கி வேலை செய்வார்கள் என்பது கூடுதல் பலம். இப்போதைக்கு மூன்றாம் அணி.
பிரச்சனை: காங்கிரஸுக்கு பகிரங்க அழைப்பு விட்டதால், தேர்தலுக்கு பின்னான நிலைமை சொல்ல முடியாது. ஜெயலலிதாவின் தேவை, திமுக ஆட்சி கலைப்பு. அதற்கு தோதாக தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து ஐ.மு.கூ க்கு 15-20 இடங்கள் தேவைப்படுமெனில் காங்கிரஸ் திமு்கவை கழட்டிவிட்டு அதிமுகவோடு சேரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதரவு வி்லக்கப்படும்.அதிமுக ஆட்சியில் அமர ஒரு வாய்ப்பிருக்கும்.

தெலுகு தேசம் (TDP) , தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி (TRS) – சந்திரபாபு நாயுடு.ராகவேந்தர் ராவ். ஆந்திரா. உத்வேகத்தோடு காங்கிரஸ் எதிர்ப்பலையில் போட்டி போ்டுகிறார்கள். தெலுகு தேசம் + தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி + கம்யுனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து மாநிலத்துக்கும், நாடாளுமன்றத்திற்குமான தொகுதி உடன்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன. சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னை நிறுப்பித்தாகவேண்டிய கட்டாயம்.
பிரச்சனை: ஐ.மு.கூக்கு கண்டிப்பாக போக மாட்டார்கள். ஆனால் ஒரு வேளை தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், தெலுகு டதேசம் பாஜகவுக்கு வெளியிலிருந்தோ, இல்லை உள்ளே போயோ ஆதரவு கொடுக்கலாம். பாஜகவும் இப்போது தெலுங்கானா பற்றி பேசுவதால் தெலு்ங்கான ராஷ்ட்ரிய சமிதியும் பாஜகவுக்கு ஆதரவு தரலாம்

ஆக இப்போதைக்கு
Third Front = JD(U)+ CPI +CPM + TDP + TRS + AIADMK + உதிரிக் கட்சிகள்

மதில் மேல் பூனைகள்

பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) – மாயாவதி. உத்தரப்பிரதேசம். தலித் மக்களின் எழுச்சி என்று நம்பப்படுபவர். டெல்லியின் மீதும், பிரதமர் பதவி மீதும் எப்போதும் ஒரு கண் இருக்கிறது. உ.பியின் 80 தொகுதிகளில் பிஎஸ்பியின் கை ஒங்கியி்ருக்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு கூட்டணி இல்லாமல் கனவுகள் நிறைவேறாது. ஆனாலும், இன்னமும் மூன்றாவது அணியினை நம்பி இறங்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏதேனும் வியுகங்கள் வகுக்கலாம்

பாட்டாளி மக்கள் கட்சி – ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், கூட்டணியிலிருந்து விலகி விட்டார் என்று தமிழ்நாட்டில் நம்பப்படுகிறது. தொடர்ச்சியாக 12 வருடங்கள், பாஜகவுடனும், காங்கிரஸுடனும் இருந்து மத்தியில் அமைச்சரவைகள் பெற்றுக் கொண்ட கட்சி. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருத்து வேறுபாடுகள், ஆளும் திமுக + காங்கிரஸ் கூட்டணியோடு உருவாகியிருக்கிறது. பல்வேறு மாநிலம் தொ்டர்பான பிரச்சனைகளிலும் பாமகவின் பார்வை புறக்கணிக்கப்பட்டது, ஆழமான விரிசலை உண்டாக்கியிருக்கிறது. ஹேஷ்யங்கள், ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணிக்கு போவார் என்று சொல்கிறது. இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை.

மேற்சொன்னவை தேர்தலுக்கு முன்னான இப்போதைய நிலைமை.

நிகழ்சூழல் 1

ஒரு வேளை காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐ.மு.கூ தொகுதிகள் அடிப்படையில் மு்ன்னிலை பெறும் பட்சத்தில், ஜனதா தள் (இணைந்தது), அதிமுக, ஒரு சாரார் கம்யுனிஸ்டுகளே அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம்.

நிகழ்சூழல் 2

ஒரு வேளை பாஜக முன்னிறுத்தும் தே.ஜ.கூ தொகுதிகள் அடிப்படையில் முன்னிலைப் பெறும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி பார்ட்டி, தெலுகு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். அதிமுகவிற்கும் அதே நிலை.ஆனால் பாஜகவினர் முன்பு நடந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

நிகழ்சூழல் 3

மூன்றாவது அணி பெருவாரியான தொகுதிகள் முன்னிலைப் பெறுவது என்பது இப்போதைக்கு சொல்லமுடியாத காரியம். அப்படி ஒருக்கால் நடக்கும்பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மேற்சொன்ன மூன்று சூழல்களிலும் பாமக பொதுவான ஒரு ஆதரவினை, சூழலைப் பொறுத்து எடுத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என்று தோன்றுகிறது.

THE GAME JUST BEGINS.

நாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13

leave a comment »

தேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.

முதல் பகுதி – ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)
இரண்டாம் பகுதி – ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)
மூன்றாம் பகுதி – ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
நான்காம் பகுதி – மே 7 (85 தொகுதிகள்)
ஐந்தாம் பகுதி – மே 13 (86 தொகுதிகள்)

முடிவுகள் மே 16இல் இருக்கும்.

சில புள்ளிவிவரங்கள்.

  • இருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது
  • 71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
  • 714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்
  • 8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக்கப்படும்
  • 11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
  • இப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்

Anti-incumbency Factor தேய்கிறதா?

leave a comment »

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் – anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு “qualified extension” அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

Czarinas of India – ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி

leave a comment »

ஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.

ஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.

மாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 – 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.

Will Women Power rock the elections, we got to wait and watch?

ஜெயலலிதாவின் காங்கிரஸ் கலாட்டா

with 4 comments

நேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.

தமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் – திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் – அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

அசாருதீன் காங்கிரஸில் இணைந்தார்

leave a comment »

கிரிக்கெட் ஆட்டங்களில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்திய அணியிலிருந்து தடை செய்யப்பட்ட, முன்னால் இந்திய கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

கட்சிப் பிரமுகர் வீரப்ப மொய்லி தானே சென்று சோனியா காந்தியிடம் பேசி, அனுமதி பெற்றுள்ளாராம்.

வாழ்க!

Written by Badri Seshadri

February 19, 2009 at 6:04 PM

பாஜகவின் தேர்தல் முகங்கள்

leave a comment »

BJPs Poll calculations

BJP's Poll calculations

நாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.

அவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது – அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளராக நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம், பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

அவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.

  1. 70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன
  2. பாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான – பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது
  3. anti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன
  4. மாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை

பார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே